பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு: தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று (28.05.2020) முதல் நடைபெற உள்ளது. இதையொட்டி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 விடைத்தாள் திருத்தும் பணி 27.05.2020 முதல் 09.06.2020 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களும் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பாடங்களும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் சமூக இடைவெளி பின்பற்றி ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி, திருத்தப்படும் பாடங்கள் – கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் வணிகக்கணிதம், சக்தி விநாயகர் இ;ந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி, திருத்தப்படும் பாடங்கள் – தமிழ் மற்றும் ஆங்கிலம், சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி, திருத்தப்படும் பாடங்கள் – பொருளியல் மற்றும் வரலாறு, காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர், திருத்தப்படும் பாடங்கள் – அனைத்துப் பாடங்கள் என மொத்தம் 4 துணை விடைத்தாள் திருத்தும் மையங்கள் செயல்படவுள்ளது.
மேலும் முதன்மை மற்றும் துணை விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 1,344 முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளார்கள். அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் சோப்பு மூலம் கைகளை கழுவுவதற்கும், ஒரு ஆசிரியருக்கு 3 முகக்கவசம் என அனைவருக்கும் வழங்கிட போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாணிடைசர்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்த ஏதுவாக போதிய இடவசதி (ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் – ஒரு கூர்ந்தாய்வு அலுவலர், 6 உதவி தேர்வாளர்கள்) என மொத்தம் 8 நபர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் வெவ்வேறு ஒன்றியங்களிலிருந்து மதிப்பீட்டு மைங்களுக்கு வருகை புரிய ஏதுவாக மண்டல போக்குவரத்து அலுவலருடன் தொடர்பு கொண்டு 27.05.2020 அன்று 6 வழித்தடங்களும், பின்னர் வரும் நாட்களில் 11 வழித்தடங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போக்குவரத்து வசதி தேவைப்படும் பட்சத்தில் முன்னேற்பாடாக 22 தனியார் பள்ளி பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சாரண – சாரணியர் இயக்க தன்னார்வலர்கள் 21 நபர் அடங்கிய குழு மூலம் அனைத்து மையங்களின் சுகாதாரத்தினை கண்காணிக்கவும், செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் 7 நபர்கள் மூலம் குழுக்கள் அமைத்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் பேருந்து மூலம் மதிப்பீட்டு மையம் வந்து செல்வதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு அடையாக அட்டை வழங்கப்படவுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்கள் உடல் வெப்பநிலையை கண்காணித்திட தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் அதவா டிரஸ்ட் மூலம் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சுமார் 4,000 முககவசங்கள் மற்றும் சாணிடைசர்களும் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 180 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளார்கள் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவிராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, அதவா டிரஸ்ட் நிர்வாகி பாலகுமரேசன், பொறுப்பு அலுவலர் சேகர் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.