மே 3 ம் தேதிக்கு பிறகு சிறு குறு வியாபாரிகள் கடை திறக்க அனுமதி கோரி ஆட்சியருக்கு மனு : வணிகர் சங்க பேரவை

மே 3 ம் தேதிக்கு பிறகு தூத்துக்குடி நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் கடை திறந்து வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியுள்ளதாவது:   கொரானா வைரஸ்  அச்சுறுத்தலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி  மக்கள் அனைவரும் சமூகவிலகலை கடைபிடித்து வருவதும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தாங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளிலும் வணிகர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளோம். தற்போது  மாவட்டத்தில் கொரானா வைரஸ் கட்டுக்குள் இருப்பதுடன் மிக வேகமாக குறைந்தும் வருகிறது. 

ஆதலால் மே 3 ஆம் தேதிக்கு பிறகு தூத்துக்குடி  நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரும்  கடை திறந்து வணிகம் செய்ய அனுமதித்து வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். தாங்கள்  விதிக்கும் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும்  இருப்பினும் அதனையும் உறுதியாக கடைபிடிக்க செய்வோம் என்றும் உறுதி கொடுக்கிறோம்.

மேற்கண்ட  கோரிக்கையை தமிழக அரசிற்கும் தெரிவித்து தூத்துக்குடி  நகரில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரையும் கடை திறந்து வணிகம் செய்ய அனுமதித்து அவர்களின்  வாழ்வாதாரத்தையும், நலனையும் காத்திட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.