தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: தமிழகத்தில் 4வது கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 55 நாட்கள் கடந்து விட்ட சூழ்நிலையில் மேலும் இந்த அறிவிப்பானது ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலார்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஆட்டோக்களின் சக்கரங்கள் சாலைகளில் உருளாததால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கைச்சக்கரம் கடுமையான வறுமையையும், நெருக்கடியையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மே 17 க்கு பிறகு சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆட்டோக்களை இயக்க எங்கள் சம்மேளனம் சார்பிலும், சங்கம் சார்பிலும் பலமுறை அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கடிதங்கள் கொடுத்தும் எங்கள் மனுக்கள் பரிசீலனை செய்யப்படவில்லை. நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கும் மட்டும் அரசு நிவாரணம் வழங்கிட அரசு உத்திரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்திட விதிமுறைகள் காரணமாக ஆட்டோ தொழிலாளர்கள் 90 சதம் பேர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முடியவில்லை. எனவே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15000/- நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும் நான்காம் கட்ட ஊரடங்கில் ஆட்டோக்கள் இயங்க தளர்வு இருக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் ஆட்டோக்கள் இயங்கிட அரசு தரப்பில் எந்தவித அறிவிப்பும் வரவில்லை . மேலும் நிவாரணமும் வழங்கப்படவில்லை .
ஆகையால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15000/- நிவாரணம் வழங்கிடவும், ஆட்டோ தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆட்டோக்கள் இயங்கிடவும், அனுமதியளித்திடவும் வேண்டுகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.