தூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு

தூத்துக்குடி 17வது வார்டு கீழ அலங்காரதட்டு வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளீர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி 17வது வார்டு கீழ அலங்காரதட்டு வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் அம்மனுவில் கூறியதாவது, “நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 20 வீடுகளுக்கும் மேலாக உள்ளது. நாங்கள் அங்கு 10 வருடங்களுக்கும் மேலோக குடியிருந்து வருகின்றோம். எங்கள் தெருவில் இதுநாள் வரையிலும் தெரு மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது. மேலும் குழந்தைகள் இருப்பதால் இரவு நேரங்களில் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து எந்த ஒரு குடிநீர் குழாயும் அமைக்கப்படவில்லை. கிணறுகளிலிருந்தும் தனியார் லாரிகளிலிருந்தும் தண்ணீர் பெற்று பயன் படுத்துகின்றோம். எங்கள் குடியிருப்பை சுற்றியுள்ள சுமார் 75 வீடுகளுக்கும் எந்தவொரு தண்ணீர் வசதியும் இல்லை.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் (25.08.2020) அன்று மனு அளித்திருந்தோம். மற்றும் Online-லும் மனுச் செய்திருந்தோம். அதன் மனு எண்: 2020 / 9005 / 28 / 775128/ 0827 ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவொரு பதிலும் இன்றுவரை தரவில்லை. ஆகையால் தாங்கள் தயவுகூர்ந்து எங்கள் நிலைமையை கருத்திற்கொண்டு எங்கள் பகுதிக்கு தெரு மின் விளக்கு அமைத்திடவும், குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தரவும் மிகவும் தாழ்மையுடன் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்” என அம்மனுவில் கூறியிருந்தனர்.