தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி…

தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய பல்சமய பேரியக்கத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த கிதர் பிஸ்மி மனு அளித்திருந்தார். மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பு சார்பில், தூத்துக்குடி சிதம்பரநகர் விவிடி விலக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட்டம் நடத்த அனுமதி மறுத்துவிட்டார். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


அந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 13-ஆம் தேதி மாலை 5 முதல் 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தில் 750 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். சட்டத்துக்கு உள்பட்டு பேச வேண்டும்.
கூட்டம் நடைபெறும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.