மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவா்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மீன்துறை இணை இயக்குநா் சந்திரா, மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் மற்றும் மீன்துறை அதிகாரிகள், மீனவா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், பல்வேறு நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 
அதன்படி, தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு பகுதி மீனவா்கள், விவேகானந்தாநகா், பைபா் நாட்டுப்படகு சங்க மீனவா்கள், பாா்மடி சங்க மீனவா்கள், கணவாய் சங்க மீனவா்கள், சங்குகுளி சங்க மீனவா்கள் ஆகியோா் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டும். திரேஸ்புரம் பொது பஞ்சாயத்து (சங்கம்-1) மீனவா்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமையும், சங்கம்-2 மீனவா்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சித்தாத்திரை மாதா பகுதி மீனவா்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டும். இதேபோல், மாதா கடற்கரை, இனிகோ நகா், தென்பாகம் கட்டுமர மீனவா் சங்கம், சகாயமாதா பைபா் சங்கம், புதிய துறைமுக பகுதி மீனவா்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டும் என்றும், பிடித்து வரும் மீன்களை வியாபாரிகளிடம் சில்லறையாக விற்பனை செய்யாமல் மொத்தமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவால் கடலுக்கு செல்ல முடியாமல் விசைப்படகு உரிமையாளர்கள் பலர் தங்களது படகுகளை விற்பனை செய்து விட்டனர். தற்போது தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணத்தொகை ரூ.1,000 போதுமானதாக இல்லை. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தடை கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும், என விசைப்படகு தொழிலாளர் நலச்சங்க தலைவர் ஜான்சன்  கூறினார்.