மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்களை பெற்றார். கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வருவாய் துறை மூலம் கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய 16 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 13 பேருக்கு ரூ.1.30 லட்சம் உதவித் தொகை, பட்டு வளர்ச்சித்துறை மூலம் மாவட்ட அளவில் சிறந்த முறையில் வெண் பட்டுக்கூடு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கிடும் திட்டத்தின் கீழ் தோல்மாலைப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கு ரூ.25,000/-க்கான வரைவோலை, புளியகுளத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ரூ.20,000/-க்கான வரைவோலை, லட்சுமியம்மாள்புரத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு ரூ.15,000/-க்கான வரைவோலை என மொத்தம் 3 நபர்களுக்கு ரூ.60,000/-க்கான வரைவோலையினையும், மற்றும் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாளில் இலவச வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளித்த கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் செய்தியாளர்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 46 சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் நமது மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை உரிமங்களை பெற்று பதிவு செய்யப்பட்ட 42 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் உள்ள குளங்களில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. எனவே, கோடை காலத்தில் மாவட்டத்தில் எந்த குடிநீர் தட்டுப்பாடும் வர வாய்ப்பு இல்லை எனவும் ஒருவேளை தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் அதனை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பிசான சாகுபடிக்கே இந்த மாத இறுதி வரை தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதற்கு பிறகு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்.

மற்றும் தூத்துக்குடி ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் 1-ம் கேட் வரை வரவுள்ளது. எனவே, 1-ம் கேட்டை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ம் கேட்டை மூடிவதா அல்லது சுரங்கப்பாதை அமைப்பதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் அறிவித்திருந்தார்.