பதநீர் விற்க தடை என்பதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உதவிக்காக காத்து இருக்கும் மக்கள்

ஊரடங்கால் பதநீர் விற்க தடை விதிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உதவிக்காக மக்கள் காத்து இருக்கின்றனர்.

தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம். இங்கு பனைதொழில் பிரதானமான தொழிலாக அமைந்து உள்ளது. இந்த பகுதியில் சுமார் 700 பனை மரங்கள் உள்ளன. அவற்றில் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பதநீர் இறக்கி வருகின்றனர். இவர்கள் பபதநீரை மொத்தமாக ஊர் மக்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஆர்.சி. நடுநிலைபள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6,7,8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஊர் மக்கள் வழங்கி வருகின்றனர்.இதற்காக அவர்கள் ஆண்டு தோறும் பதநீர் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை பள்ளிக்கூட நிதியாக வைத்து அந்த பள்ளிக்கூடத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்.

வீடியோ : https://youtu.be/T4ynPy2ZSUs

இந்த ஆண்டு பதநீர் சீசன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் பதநீர் அதிக அளவில் கிடைத்து. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பதநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.இதனால் அந்த பகுதி மக்கள் பதநீரை விற்பனை செய்ய முடியாததால், அதை காய்த்து கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கூடத்துக்கு நிதி சேர்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. ஆகையால் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவதற்க்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.