தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கப்பிகுளம் கிராமத்தில் இயங்கும் ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 14ம் தேதி காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தபோதும் காலை 10 மணி வரை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து மாணவ, மாணவிகள் வெளியே மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த மக்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டதில், அவர் விடுப்பில் சென்றிருப்பதாக தெரிவித்தார். பின்பு ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலரை கிராம மக்கள் செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளதாகவும் உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றுப்பணிக்காக சென்றுள்ளதால் கப்பிகுளம் பள்ளிக்கு பக்கத்து கிராமத்தில் இருந்து வேறு ஆசிரியரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். முற்பகல் 11.15 மணிக்கு வடக்கு கைலாசபுரத்தில் இருந்து ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வந்தார். அதன்பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளியில் கூடிய மக்களிடம் விசாரித்த போது ”தற்போது ஆசிரியர்கள் வருகையை ஆன்லைன், வாட்ஸ்அப்பில் பார்த்து விடலாம். மேலும், தலைமை ஆசிரியர் விடுமுறை, உதவி ஆசிரியருக்கு மாற்றுப்பணி என்பது வட்டார கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருக்காது. இந்த பள்ளியை சுற்றி வயல்வெளிகள் அதிகமாக உள்ளது. மழை காலமாக உள்ளதால் ஆசிரியர்களை நம்பியே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆசிரியர்கள் விடுமுறை அல்லது மாற்றுப்பணி என்றால் உடனடியாக வேறு ஆசிரியரை பணியமர்த்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.
