பொதுமக்கள் கை கழுவுவதற்காக நவீன எந்திரம்

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் கை கழுவுவதற்காக நவீன எந்திரத்தை ஆணையாளர் ஜெயசீலன் நேற்று தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொது இடங்களில் மக்கள் பயன்படுத்தும் வகையில் கைகழுவுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் தண்ணீர் குழாயை ஒருவர் தொடுவதை, அடுத்தவர் தொடமால் இருக்கும் வகையில் கால்களின் உதவியால் தண்ணீர் மற்றும் சோப்பு திரவத்தை உந்தி தள்ளும் வகையிலான பெடல் வாஷ் என்னும் நவீன எந்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தபுதிய எந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி கணேஷ்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி பெடல் வாஷ் எந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்த எந்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட 7 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.