கால்நடைகளுக்கான செயல்பட்டு வரும் அம்மா ஆம்புலன்ஸ் சேவை : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சிறப்பு நிகழ்வாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் கால்நடை வளர்ப்போரின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கால்நடை மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் வாரந்தோறும் 11 வழித்தடங்களில் கால்நடை உதவி மருத்துவர்கள் சென்னையில் மருத்துவ குழு சென்று மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், மற்றும் கால்நடை கிளை நிலையங்கள் எப்பொழுதும் போல் செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு நடைபெறும் பணிகள் மண்டல இணை இயக்குனர் மற்றும் கோட்ட உதவி இயக்குனர்கள் முன்னறிவிப்பின்றி சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கால்நடை உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தின் சிறப்பு நிகழ்வாக கால்நடை மருத்துவர்கள், கால்நடை வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று செயற்கை முறை கருவூட்டல் பணி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் கால்நடைகளுக்கான செயல்பட்டு வரும் அம்மா ஆம்புலன்ஸ் சேவையும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால் அழைப்பு எண் 1962 பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.