தூத்துக்குடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறப்பு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று நோய் பரிசோதனை ஆய்வகத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு திறந்து வைத்து பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: பாரத பிரதமர் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் விதமாக சுய ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார். மேலும் கரோனா வைரஸ் தொற்று நோய் சமூக பரவாமல் இருக்கும் வகையில் மே 3 தேதி வரை சுய ஊரடங்கு உத்தரவினை நீடித்து உள்ளார். 

கால கட்டத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைய கூடாது என்பதற்காகவும், பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காவும் தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கபடும் என அறிவித்தார். 

கரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனை ஆய்வகம் வேண்டும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கையாக வலியுத்தினோம். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனை ஆர்டிபிசிஆர் கருவி மற்றும் இதர உபகரணங்கள் என ரூ.60 லட்சம் மதிப்பிலும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினம்தோறும் 71 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனை செய்ய முடியும். 
இதற்கு முன்பாக கரோனா தொற்று சளி மாதிரி சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி 24 மணி நேரம் பின்பு அதற்கான பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றது. தற்போது இன்று திறந்து வைத்த இந்த ஆய்வகத்தின் மூலம் 6 மணி நேரத்தில் கரோனா தொற்று பரிசோதனை முடிவு கிடைக்கும். நமது மாவட்டத்தில் கரோனா தொற்றினால் 26 நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 18 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 நபர்கள் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 நபர்கள் சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். 

மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் பரிசோதனை ஆய்வகம் அமைத்து தந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் சமூக பரவல் ஏற்படவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லும்போது சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், முன்னாள் வாரிய தலைவர் ஆறுமுகநயினார், முக்கிய பிரமுகர்கள் செரினா பாக்யராஜ், ஏசாதுரை, கருணாநிதி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.