எம்பவர் சார்பில்; உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது

தூத்துக்குடியில் எம்பவர் சுற்றுச் சூழல் அமைப்பு, அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி மெய்யெழுத்து தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினம் பழைய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது

1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்பவர் சார்பில் பிரசுரிக்கப்பட்ட சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்! புவி வெப்பமயமாவதைத் தடுப்போம் ! என்ற ஸ்டிக்கரை வெளியிட்டு பல வகையான மரக் கன்றுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு எம்பவர் செயல் இயக்குநர் தலைமை வகித்து பேசியதாவது :

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக பல்லுயிர்ப் பெருக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது அவசியமானதும் நெருக்கடியும் கூட. சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் ச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது. இச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கான தொடர் விடுபடாமல் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியமானதாகும். பல்லுயிர் பெருக்கத்தில் தடையாக இருக்கும் இரசாயன பூச்சு கொல்லிகளால் நன்மை தரும் பூச்சிகள் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்க தொடர் தொடராமல் விடுபடும் சூழலால் இன்று உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு எனும் நிலைக்கு நாம் வாழ வேண்டிய நிலையில் நமது பொறுப்பு உணர்ந்து பல்லுயிர் பெருக்க சூழலை உருவாக்கி நமது வாழ்வியல் சூழலை காப்போம் என உறுதி ஏற்போம் என எம்பவர் சங்கர் கூறினார்.

மரக்கன்றுகளை அன்னம்மாள்; பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா, எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, கணேசன், பிரம்மநாயகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்; மெய்யெழுத்து தன்னார்வ அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் அன்னம்மாள்; பெண்கள் கல்வியியல் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்பவர் பணியாளர்கள் ஜான் வில்பிரட் தீபக், ஏஞ்சல் ஸ்டெல்லா ஆகியோர் செய்திருந்தனர்.