எம்பவர் இந்தியா சார்பில், முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகத்தில் முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. முதியோர் கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளாக கடந்த 2006 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது :

இந்தியாவின் 23 நகரங்களில் 5,014 முதியோரிடம் ‘ஹெல்ஃபேஜ் இந்தியா’ தொண்டு நிறுவனம் கடந்த 2018-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இளைய சமுதாயத்தினரால் 25 சதவீத முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. இதைவிட இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, 52 சதவீத முதியவர்கள் தங்கள் மகன்களாலும் 34 சதவீத முதியவர்கள் தங்கள் மருமகள்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவமதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் யாரிடமும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 60 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995 ம் ஆண்டு 542 மில்லியனாக இருந்தது. இது 2020 – 2025 இல் 1.2 பில்லியன் ஆக அதாவது இரு மடங்காக உயரப் போகிறது.

முதியவர்களுக்கு மனம், சொல், செயல் என எந்த வகையிலும் அவமதிப்பு நிகழலாம். வெளியில் கூட்டுக்குடும்பம் என்று சொல்லிக் கொண்டு, வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் இருப்பது கூட மனதளவில் காயப்படுத்துதல் ஆகும். வீட்டில் இருக்கும் முதியவர்களை அடிக்கடி திட்டுவது, சண்டை போடுவது, வாய்மொழி சார்ந்த அவமதிப்பு, காசோலையில் பொய் கையொப்பமிட்டு பணம் எடுப்பது, சொத்துகளை எழுதிவைக்கச் சொல்லி மிரட்டுவது, மறதிநோயால் பாதிக்கப்பட்ட முதியோரை அடித்தல், துன்புறுத்துதல் போன்றவை முதியோர்களை அவமதிக்கும் செயலாகும் என எம்பவர் சங்கர் கூறினார். நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கணேசன், ஜெயபால், காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்பவர் இந்தியா பணியாளர் தீபக் செய்திருந்தார்.