கல்வி கட்டணம் செலுத்த தேவை இல்லை : தமிழக அரசு

கொரோனா பரவல் தடுக்க தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தேர்வு ஏதும் நடைபெறவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் எந்த செமஸ்டரிலும் நடைபெறவில்லை. இந்தநிலையில், அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 நாட்களாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். வேலைக்குச் செல்லவில்லை. இன்னிலையில் கட்டணம் செலுத்துமாறு கல்வி நிறுவனங்கள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தையும், நிலுவையில் உள்ள தற்போதைய நிகழாண்டுக்கான கட்டணத்தையும் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்துவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கும் புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:  மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்வி கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தக்கூடாது. ஊரடங்கு முடியும் வரை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் இதனை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.