தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பல சீரமங்களுக்கு உள்ளானர்கள். எனவே, ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அனுமதி அளித்தது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய 16.4.20 அன்று ஒரு வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. முதல் கூட்டத்தை நடத்தி அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இன்று (20.04.20) சமர்ப்பித்தது. இந்த குழுவின் ஆலோசனைகள் அனைத்தும் கவனமாக ஆராயப்பட்டன. அதனடிப்படையில் தொற்றுநோய் மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் வேண்டியுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். தொற்று நோயின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து நோய் தொற்று குறைந்தால் வல்லுனர் குழுவின் ஆலோசனை பெற்று திறமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்..