என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தேசிய வருவாய்வழிமற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகை இந்த கல்வியாண்டு முதல் 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக டிசம்பர் 15-தேதிக்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங்களில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.