தூத்துக்குடியில் கொரானா சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 பேரில் 2 குழந்தைகள் உட்பட தூத்துக்குடியை சார்ந்த 6 பேரும், 2 பேர் பேட்மாநகர், ஒருவர் ஆத்தூர் உள்ளிட்ட 9 பேர் குணமாகி இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து அவர்களுக்கு பழங்களை வழங்கி அவர்களை வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தனர்.

பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற் பட்டவர்களில் 27 பேரில் 5பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சிகிச்சை.பெற்று வந்தனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். ஏற்கனவே 7 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். தற்போது இம்மருத்துவமனையில் 5 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்ட கொரோனா தொற்று கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனை கூடத்தில் 198 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற அவர், கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை போல் செய்திகளை சேகரித்து அனுப்பி வரும் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார்.