மின் தேவை எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்போதும், குறையும்போதும், உற்பத்தி அளவை கண்காணிக்க, தமிழக மின் வாரியம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளது. இது, தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது. இந்த மையம், அடுத்த நாள் எவ்வளவு மின் தேவை இருக்கும்; பூர்த்தி செய்ய எவ்வளவு மின்சாரம் தேவை; அதை எந்த மின் நிலையங்களில் இருந்து பெறலாம் என்ற விபரங்களை, உத்தேச அடிப்படையில், முந்தைய நாள் திட்டமிடுகிறது. திட்டமிட்டதை விட, மின் தேவை எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப, மின் உற்பத்தியை உடனே அதிகரிக்க வேண்டும். அதே போல, மின் தேவை குறையும்போது, மின் உற்பத்தியை குறைக்க வேண்டும்.இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் வரும்போது, பகிர்ந்தளிப்பு மைய அதிகாரிகள், அனல், காற்றாலை உள்ளிட்ட மின் நிலையங்களை, தொலைபேசி வழியாக, மின் உற்பத்தியை அதிகரிக்குமாறு அல்லது குறைக்குமாறு கூறுகின்றனர்.இதனால், அந்த பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு அனுமதித்துள்ள அளவில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்ய வேண்டும். இல்லையேல், அபராதம் விதிக்கப்படும். தொலைபேசி, இணையதளம் வாயிலாக அறிவுறுத்தினால், துல்லியமாக, விரைவாக செயல்படுவதில்லை. உதாரணமாக, 100 மெகா வாட் குறைக்க அறிவுறுத்தினால், அதை விட, அதிகமாக குறைத்து விடுகின்றனர். இதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில், மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ள துணை மின் நிலையங்களில், தொலைதொடர்பு வதியுடன் கூடிய கட்டமைப்பு அமைக்கப்படும். அதில், மின் தேவை, மின் உற்பத்தி உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்து, பகிர்ந்தளிப்பு மையத்துடன் இணைக்கப்படும். இதனால், மின் தேவை திடீரென அதிகரிக்கும்போதும், குறையும்போதும், அந்த கட்டமைப்பு தானாகவே செயல்பட்டு, எந்தெந்த மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க, குறைக்க வேண்டும் என்பதை உடனே தெரிவிக்கும். இதனால், சரியான அளவில், மின் உற்பத்தி செய்ய முடியும்.இந்த பணி, சோதனை ரீதியாக, 6 கோடி ரூபாய் செலவில், தற்போது, காற்றாலை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.