ரூ.3 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம்: விளாத்திகுளம் ஊராட்சி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திட்ட குறுகள் ஒப்படைப்பு வருவாய் நிதி ரூ.3 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையில் கலந்துகொண்டார். மேலும் மகளிர் திட்டம் மூலம் கோவிட் 19 சிறப்பு வங்கி கடனாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.34.89 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திட்ட குறுகள் ஒப்படைப்பு வருவாய் நிதி ரூ.3 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. இன்று இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரைத்தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர். ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆகியோர்களின் அறை இடம்பெறும். முதல் தளத்தில் கணிணி அறை, காப்பறை என மொத்தம் 1,732 சதுர அடியில் அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சுய ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். 

மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண தொகையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் திட்டம் மூலம் கோவிட் 19 சிறப்பு வங்கி கடன் வழங்கும் திட்டத்தில் கடன் உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் கோவிட் 19 சிறப்பு வங்கி கடன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 269 குழுக்களில் உள்ள 4,035 உறுப்பினர்களுக்கு ரூ.5.63 கோடி கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 183 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.4.61 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 
இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.34.89 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டது. மேலும் மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 குழுக்களுக்கு ரூ.65.13 லட்சம் வங்கி கடன் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கி கடன்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியசாமிராமச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கண்ணன், அழகுராமா, உதவி செயற்பொறியாளர் அமலாஜெர்சிசாக்குலின், இளநிலை பொறியாளாகள் மாரியப்பன், படிபீவி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலசுந்தரம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.