அக்.1 முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் & ஆர்.சி புக்!

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் ஒரே மாதிரியான ‘புதிய டிரைவிங் லைசென்ஸ்’ மற்றும் வாகனத்தின் பதிவுச்சான்று என்று சொல்லப்படும் ஆர்.சி புக் வழங்கும் புதிய திட்டம் நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் லைசென்ஸ்கள் மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது ஓட்டுநர் உரிமத்தை மாற்றுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை த் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கினால் மக்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் எளிதில் தீர்த்து வைக்க முடியும் என மத்திய அரசு முடிவு செய்து அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய டிரைவிங் லைசென்ஸ் அமலுக்கு வருகிறது.
புதிய டிரைவிங் லைசென்ஸில் , துரித தகவல் அளிக்கும் வகையில், ‘ மைக்ரோ சிப் ’ மற்றும் ‘ கியூ .ஆர். கோர்டு ’ இடம் பெற்றிருக்கிறது. அதில், ‘இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ்’ என, எழுதப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், புதிய டிரைவிங் லைசென்ஸில் பெயர், முகவரி, ரத்த பிரிவு, அவசர உதவி எண், லைசென்ஸ் உரிமம் வழங்கப்பட்ட தேதி, எந்த ஆண்டு வரை செல்லும் என்ற தகவல் அதில் அடங்கியிருக்கும்.
மேலும் அதனுள் இருக்கும் மைக்ரோ சிப் ஓட்டுனரின் குற்றங்களை ஒரே பெயரில் பத்து ஆண்டுகளுக்கு அதிகாரிகளிடம் வைத்திருக்க உதவும், அதே போல் க்யூ.ஆர்.கோர்டு மத்திய அரசின் தள உதவியோடு எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கி உரிமையாளரின் முந்தைய பதிவுகள் அனைத்தையும் அறிந்துகொள்ள உதவும். இதன் மூலம் குற்றவாளிகள் யாரேனும் தப்பித்து வேறு மாநிலம் சென்றாலும் அவர்களை எளிதில் பிடித்துவிட முடியும். வாகனம் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய ஆர்.சி. புக், அனைத்து தகவல்களையும் சிறிய ஏ.டி.எம் கார்ட் போன்ற ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொள்வதனால் வாகன ஓட்டிகள் அதை எளிதில் எடுத்துச்சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் வாகனத்தை திருடுவோர்கள் அவ்வளவு எளிதில் போலி ஆர்.சி.புக்கை தயார் செய்து விற்றுவிட முடியாது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த திட்டம் புதிய வாகனங்கள் வாங்குவோர்களுக்கு மட்டும்மல்லாமல் பழைய வாகன ஓட்டிகளுக்கும் சமமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய பயனர்கள் இந்த புதிய ஸ்மார்ட் கார்டுக்கு மாற கடைசி நாள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய டிரைவிங் லைசென்ஸ் குறித்த அறிவிப்பு கடந்த பாஜக ஆட்சியிலே மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய அரசு மக்களிடையே கருத்துக்களைக் கேட்டு, பல்வேறு பிரிவினரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Credit : Dailyhunt