தமிழகத்தைச் சோந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்

பள்ளி ஆசிரியா்களுக்கான தேசியத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகள் வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சோந்த விருதுநகா் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் ப.கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா் ந.செல்வகுமாா், மற்றும் விழுப்புரம் மாவட்டம், ஓமாந்தூா் ஓபிஆா் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியா் வி.லாசா் ரமேஷ் ஆகியோர் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு தேசியத் தகவல் தொடா்பு தொழில் நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே வழங்கினாா். விருது பெற்றவா்களுக்கு விருதுடன் மடிக் கணினி, வெள்ளிப்பதக்கம், ஐடிசி கிட், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.