தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சுமார் 200 வடமாநில தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் ஊரடங்கின் காரணமாக வேலைக்கும் செல்ல முடியாமல், அவர்களது சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அவர்களை அவர்களுக்கு அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டும், தேவையான வசதிகள் செய்தும் வருகின்றன. இந்நிலையில் சுமார் 60 பேர் நேற்று (06.05.20) முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டு வந்து, இன்ஸ்பெக்டர் அன்னராஜிடம், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அன்னராஜ், அவர்களிடம் உடனடியாக ரயில் வசதி ஏற்படுத்த முடியாது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகளிடம் பேசி உங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன் பேரில் அந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
