குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம் – தூத்துக்குடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் வேண்டும், அச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி , தூத்துக்குடியில் உலமாக்கள் சபை மாவட்டத் தலைவா் இம்தாதி பாகவி தலைமையில் சுமார்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள இந்திய உணவுக் கழகக் கிட்டங்கி முன் 750 மீட்டா் நீளமுள்ள தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்காததால், ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள இந்திய உணவுக் கழகக் கிட்டங்கி முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ. சண்முகம், கிறிஸ்துவ வாழ்வுரிமை கழகத் தலைவா் சுந்தரி மைந்தன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். அவர்களோடு உலமாக்கள் சபை மாநிலப் பொருளாளா் முஜ்பூா் ரஹ்மான், மாவட்டச் செயலா் அப்துல் ஆலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் அகமது இக்பால், வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா்கள் கிதா்பிஸ்மி, மாரிசெல்வம், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் முகமது ஜான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா்அசன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.