ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் அருணாசலபுரம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (22.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண்ணை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து திட்டத்தின்கீழ் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களை தூர்வாரி புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமலும், நிலத்தடி நீர் உயர்த்துவதற்காகவும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தும் குடிமராமத்து திட்டத்திற்கு இந்திய அளவில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. நமது மாவட்டத்தில் கடந்த 42 சதவிதம் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் குடிநீர் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

நமது மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 2016-17ம் ஆண்டில்; ரூ.2.31 கோடி செலவில் 28 பணிகளையும், 2017-18ம் ஆண்டில் ரூ.9.5 கோடி செலவில் 22 பணிகளையும், 2019-20ம் ஆண்டில் ரூ.13.15 கோடி செலவில் 37 பணிகளையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த வருடம் (2020-21) வைப்பாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.1.8 கோடி செலவில் 5 பணிகளையும், கோரம்பள்ளம் வடிநில கோட்டம் மூலம் ரூ.85 லட்சம் செலவில் 3 பணிகளையும், தாமிரபரணி வடிநில கோட்டம் மூலம் ரூ.4.27 கோடி செலவில் 9 பணிகள் என மொத்தம் ரூ.7 கோடி செலவில் 17 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று வைப்பாறு வடிநில கோட்டம் மூலம் எட்டயபுரம் வட்டம் அருணாசலபுரம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.58 லட்சம் செலவில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகளின் மூலம் பாசனம் பெறும் 70.82 எக்டர் விளை நிலங்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

அதேபோல் மீனாட்சிபுரம் கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும், விளாத்திகுளம் வட்டம் சின்னூர் கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும், ரூ.52 லட்சம் செலவில் உப்போடை அணைகட்டு ஆற்றங்கரை கண்மாய்களின் வரத்து கால்வாய் புனரமைப்பதற்கும், கோவில்பட்டி வட்டம் புதுஅப்பனேரி கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும் என மொத்தம் 5 பணிகள் ரூ.1.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அனுமதி பெற்று இலவசமாக எடுத்துக்கொண்டு பயன்பெற தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்கள். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வைப்பாறு வடிநில கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்கள் நிவேதா, ராமரத்தினம்,இவன்சலின் பெரிட்டா, எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், அருணாசலபுரம் நீர் பாசன பயன்படுத்துவோர் சங்க தலைவர் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.