செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்களின் இன்றைய நிகழ்வுகள்: கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சுப்பிரமணியபுரம் மற்றும் ஸ்டாலின் காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட 200 குடும்பங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் நகை பட்டறை தொழிலாளர்கள் 600 நபர்கள், கயத்தாறு பந்தல் தொழிலாளர்கள் 100 நபர்கள் என மொத்தம் 900 நபர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (25.05.2020) நடைபெற்றது.

நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து கோவில்பட்டி நகராட்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் 120 குடும்பங்களுக்கும், ஸ்டாலின் காலனியில் 80 தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் என மொத்தம் 200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் தலா 10 முட்டைகள் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் , கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறார். 

கொரோனா வைரஸ் தொற்று நோய் பிரச்சனையை நமது மாநிலம், நமது மாவட்டம் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படாதால் சுய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்தினால்தான் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே அரசு சுய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் ஊரடங்கு கால அவகாசம் அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளித்து தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, இந்த தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு தேவையான, அவசியமான பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

நமது மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 9,618 நபர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 160 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 27 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தொடர்ந்து 16 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் வெளி மாநிலம் மற்றும் சென்னை கோயம்பேடு பகுதிகளில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் மாவட்ட எல்கையில் சோதனைசாவடி பகுதியிலேயே கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நமது மாவட்டத்தில் ஆத்திகுளம், இளம்புவனம், பாண்டவர்மங்களம் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கோவில்பட்டி நகராட்சி சுப்பிரமணியபுரம் மற்றும் ஸ்டாலின் காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் தலா 10 முட்டைகள், பழைய பேருந்து நிலையத்தில் நகை பட்டறை தொழிலாளர்கள் 600 நபர்கள், கயத்தாறு பந்தல் தொழிலாளர்கள் 100 நபர்கள் என மொத்தம் 900 நபர்களுக்கு எனது சொந்த நிதியில் இருந்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நமது மாவட்டம் கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக உருவாக பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்விராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநா மரு.அனிதா, கோவில்பட்டி வட்டாட்சியர்; மணிகண்டன், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துறைபாண்டியன், விஜயபாண்டியன், மாயாண்டி, முருகன், மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.