தூத்துக்குடி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து. ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.04.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த பணத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 187 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: பாரத பிரதமர் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் கரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் சுய ஊரடங்கு உத்தரவினை மே 3ம் தேதி வரை நீடித்துள்ளார். தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைள் மூலம் கரோனா தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்தியாவிலே தமிழகத்தில்தான் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கரோனா தொற்று ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தின் மூலம் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் மாதிரிகள் முடிவுகள் விரைவில் கிடைக்கிறது. நாள்தோறும் சுமார் 200 மாதிரிகள் இந்த ஆய்வகத்தின் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3560 நபர்களை பரிசோதனை செய்ததில் 27 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 22 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 5 நபர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 25 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். சிகிச்சை பலன் இன்றி ஒரு பெண்மணி உயிர் இழந்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த நபரும் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பும்பட்சத்தில் நமது மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லை என்ற நிலை உருவாகும். தூத்துக்குடி மாவட்டம் மத்திய அரசு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு மண்டலத்தில் இருந்தது. தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும். கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டியில் தீயணைப்பு துறையின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், காமநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, முக்கிய பிரமுகர்கள் வண்டானம் கருப்புசாமி, வினோபாஜி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.