அரசுக்கு தெரியாமல் எவரும், மாவட்டத்துக்குள் நுழைய முடியாது : அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷஸ் சவுண்ட் சர்வீஸ் அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு அவர்கள் பந்தல் மற்றும் கலை குழுவினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். 

அதேபோல் கோவில்பட்டி புனித ஹோம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடங்கிய பைகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், லைன்ஸ் கிளப் தலைவர் டாக்டர்.பிரான்சிஸ் ரவி  மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக கரோனா தொற்று ஏற்படாத நிலையில், தற்போது 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். மற்றொருவர் சென்னையில் இருந்து அனுமதி பெறாமல் வந்தவர். அவர்கள் 2 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமானவர்கள் தமிழகத்துக்கு வரக்கூடிய நிலை உள்ளது. எனவே, அதனை எதிர்கொள்வதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 பிரதான இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களை கண்டறிந்து, அவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அரசுக்கு தெரியாமல் எவரும், மாவட்டத்துக்குள் நுழைய முடியாது என தெரிவித்தார்.