ஊரடங்கு நீட்டித்தாலும் பஸ்களை இயக்குவது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

ஊரடங்கு நீட்டித்தாலும் பஸ்களை இயக்குவது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா உறுதி செய்யப் பட்டதால் இவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்ததால், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றால், அவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துகின்றனர்.

மேலும் கரோனா அச்சுறுத்தலால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையக்கூடாது, தொழிற்சாலைகள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான எதிர்பார்ப்புகள் குறித்த அறிவிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி உரிய நேரத்தில் அறிவிப்பார். கால அவகாசம் இருப்பதால், ஊரடங்கு நீட்டித்தாலும் பஸ்களை இயக்குவது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.