கொராேனா பாதிப்பால் மறைந்த மூத்த ஒளிப்பதிவாளருக்கு அமைச்சர் இரங்கல்

சென்னை ராஜ் டிவியில் பணியாற்றிய மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க ஏதுவாக கோவிட் 19 நிவாரண தொகையாக ரூ.3,000 – வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் அனைத்து மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் நிவாரண தொகையாக ரூ.3,000 வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புடன் கொரோனா தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்ட ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இன்று கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் எனது துறை (செய்தி மற்றும் விளம்பரத்துறை) சார்பாக அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள், முககவசங்களை கட்டாயமாக அணிந்து மிகுந்த பாதுகாப்புடன் களப்பணியில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.