மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை – ஆணையரிடம் வியாபாரிகள் சங்கம் மனு

தூத்துக்குடியில் வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களாால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புகார் மனு அளித்துள்ளார்

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (வடக்கு) மாவட்ட தலைவர் பழரசம் பா.விநாயக மூர்த்தி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது

கடந்த மார்ச் 2020 முதல் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தில் உச்ச நிலையை அடைந்து வருகிறது. இதை கருத்திற்கொண்டு பல முறை கடைகளை அடைக்கச் சொல்லியும், திரும்ப தளர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறீர்கள்.

தற்போது கடந்த 27ம் தேதி மீண்டும் தேநீர் கடைகளை அடைக்க ஆணை பிறப்பித்து மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள் மூலம் கடையை மூடும்படியும், அப்படி மூடாவிட்டால் கடைகளை சீல் வைத்துவிடுவோம் என்று ஒருமையில் பேசி மிரட்டுகின்றனர். தற்காலிக பணியாளர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு கீழே பணி செய்பவர்கள், பொதுமக்களையும், வியாபாரிகளையும் அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனை வணிகர்கள் விரும்பவி்ல்லை. இந்த சூழ்நிலையை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா தொடர்பாக மாநகராட்சி எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைக்க வணிகர்கள் தயாராக உள்ளோம். ஆனால், எந்த அறிவிப்பு என்றாலும் ஒரு நாள் முன்னதாக தொலைக்காட்சி மூலமாகவோ, ஒலிப்பெருக்கி மூலமாகவோ தெரிவித்தால் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எனவே, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படாமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.