கொரானா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் : கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரானா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்திப் நந்தூரி இஆப , விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு அவர்கள் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நகராட்சி மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி பகுதிகளில் கூடுதலாக காய்கறி சந்தை அமைக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற தொடர்ந்து பொதுமக்களுக்கு வலியுறுத்தவேண்டும். சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அம்மா உணவகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள நபர்களுக்கு இலவசமாக உணவு அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு முகமூடி தினந்தோறும் மாற்றி புதிய முகமூடி அணிய அறிவுறுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்பு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ. ராஜு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி நீடித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமைச்சர், பெருமக்கள், உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறார். மாவட்டத்தில் 27 நபர்கள் கொரானா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 7 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த விட்டு வீடு திரும்பி உள்ளார்கள். சிகிச்சை பலனின்றி ஒரு நபர் இறந்துள்ளார். நேற்றைய தினம் பசுவந்தனை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரானா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் உள்ள 93 நபர்களை பரிசோதனை செய்துள்ளனர். இதில் யாருக்கும் கொரானா தொற்றுநோய் இல்லை என்ற அறிக்கை பெறப்பட்டது. நேற்றைய தினம் 36 நபர்களுக்கு கொரானா தொற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அதற்கான அறிக்கை கிடைக்கப்பெறும். இதுவரை நமது நாட்டின் சமூக பரவல்கள் ஏற்படுவதில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு பை ரூ.500க்கு வழங்கும் பணி இன்று துவங்கி வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றிட ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் கூடுதலாக 4 இடங்களில் காய்கறி சந்தைகள் அமைத்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரானா தொற்றுநோய் பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் பரிசோதனை செய்து 6மணி நேரத்தில் அதற்கான அறிக்கை கிடைக்கப் பெறுகிறது. மேலும் நமது மாவட்டத்திற்கு 600 ரபீட்கீட் பெறப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாயுள்ளத்தோடு அமைப்புசாரா தொழிலாளர் ஆகியவர்களுக்கு கொரானா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். இந்தக் கால கட்டத்திலும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி. சத்யா, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு. மோகன், கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி. விஜயா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திருமதி. ரேவதி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு. அனிதா, வட்டாட்சியர்கள் திரு.மணிகண்டன் (கோவில்பட்டி), திரு. பாஸ்கரன் (கயத்தார்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. மாணிக்கவாசகம் கயத்தார்), திருமதி. வசந்தா (கோவில்பட்டி), கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர் திரு. அய்யாத்துரைப்பாண்டியன், திரு. விஜய பாண்டியன், திரு.சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.