சூறைக்காற்றினால் பல லட்சம் ரூபாய் வாழைப்பயிர்கள் சேதமடைந்தன

கடந்த 18ஆம் தேதி வீசிய சூறைக்காற்றினால் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் வட்டங்களில் பல லட்சம் ரூபாய் பெறுமான வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. 

இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், துணைத் தலைவர் தி.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன், சேர்வைக்காரன்மடம் பாசன விவசாய சங்க தலைவர் பொன்ராஜ், சாயர்புரம் சிபிஎம் செயலாளர் சுவாமிதாஸ் ஆகியோர் அடங்கிய குழு 19.05.2020 அன்று அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் வரும் பேய்க்குளம், பொட்டைக்குளம், அத்திமரப்படடி, கோரம்பள்ளம், கொற்கை, ஆறுமுகமங்கலம், மாரமங்கலம், உமரிக்காடு, முக்காணி, ஏரல் மணக்காடு, கோவங்காடு, குலையன்கரிசல், கூட்டாம்புளி, சாயர்புரம், கொடுங்கணி, வீரநாயக்கன்தட்டு, அய்யனடைப்பு, காலாங்கரை பகுதிகளில் பல லட்சம் ரூபாய் பெறுமான வாழைகள் சேதமடைந்துள்ளதை கண்டறிந்தனர்.20.05.2020 அன்று விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழை விவசாயிகளுக்கு சூறைக்காற்றினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை விவரித்தனர்.
ஏற்கனவே கொரானா ஊடரங்கால் வாழைத்தார்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல் பழங்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் தாங்க இயலாது என்பதை எடுத்துரைத்தனர்.ஒரு ஏக்கரில் வாழை பயிரிட ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படும் நிலையை விளக்கி வருவாய்துறை மூலம் உடனடியாக கணக்கீடு செய்து வாழை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினர்

Credit : Tutyonline