சாத்தான்குளத்தில் மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்ட விவகாரம் – காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரனைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்ட விவகாரத்தில் காவல் துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறையினர் மிரட்டியதாக மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இமெயில் மூலமாக மாஜிஸ்ட்ரேட் புகார் அளித்தார்.

இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்தும், தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் அதியசயகுமார், கிஷிங்கர், சாமுவேல் ராஜேந்திரன், அரி ராகவன், சுரேஷ்குமார், செல்வின், இளையவளவன், சந்தனசேகர் உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.