சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்த விவகாரம் – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டிஎன் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள் அதனடிப்படையில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு பதிவு செய்யவும் போதிய முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள் சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர்.

தொடர்ந்து 12 மணியளவில் விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலும், மாஜிஸ்திரேட் அறிக்கையின் அடிப்படையிலும், இதனை கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என கருதுவதாக தெரிவித்தனர்.

சிபிஐசிடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கு விசாரணையை உடனடியாக கையில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உத்தரவிட்டனர். அதே போன்று சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி குடும்பாத்தாருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராயினர்.நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்யப்பட்ட மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்