எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

தூத்துக்குடியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் வசதிகள் வேண்டுதல் தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு சார்பில் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருவது மிகவும் கவலை அளிக்கிறது. 11.07.2020 அன்றைய புள்ளி விவரப்படி 1096 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவாகளை சிகிச்சைக்கு சேர்க்க தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படாத சூழ்நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் மருத்துவம், உணவு வழங்குதல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. ஆகவே இவ்விஷயத்தில் தாங்கள் நேரிடையாக தலையிட்டு கீழ்க்கண்டவற்றை நிறைவேற்ற ஆணையிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

1.கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு சேர்க்க தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

2. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை வெளி மாவட்டங்களில் சிகிச்சைக்கு சேர்க்க விருப்பப்படுபவர்களுக்கு உடனடியாக இபாஸ் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

3.கொரோனா நோய்த் தொற்று தவிர இதய நோய், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்ப்பதற்கு உரிய வசதிகளை தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது