தமிழக முதல்வருக்கு எம்பவர் இந்தியா அமைப்பு சார்பில் கடிதம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுவது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குனர் ஆ. சங்கர் அவர்கள் கூறியதாவது: “நேற்று நெய்வேலி என்.எல்.சி. 2 வது அனல் மின் நிலையத்தின் 5 வது அலகில் கொதிகலன் வெடித்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

நெய்வேலியைப் போன்றே தூத்துக்குடியிலும் பல அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் பல நேரங்களில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அனல் மின் நிலையங்களையும் தொழில் நுட்ப ரீதியான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து அனல் மின் நிலையங்களிலும் போதுமான பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் மற்றும் அவசர கால பேரிடர் மேலாண்மை வசதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து அனல் மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அவை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மேலும் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர், தொழிற்சாலை ஆய்வாளர், வருவாய்த்துறை அலுவலர்கள், நுகர்வோர் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அரசு வெளியிடும் விதிமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்;டுள்ளதா என்பதை இந்த குழு உறுதி செய்ய வேண்டும் என உத்திரவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.