ராஜஸ்தான்- க்கு தப்ப முயன்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை

கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் குல்பி ஐஸ், பலூன், பஞ்சு மிட்டாய் ஆகியனவற்றை வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த – 26-ம் தேதி இந்தியா முழுவதும் 21- நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் வட மாநிலத்தவர்களின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தங்களால் பிழைப்பு நடத்த முடியாது என எண்ணி 12-க்கும் மேற்பட்ட பைக்குகளில் 27-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு புறப்புட்டு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தை கடந்து தூத்துக்குடி மாவட்ட எல்லையான கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பருத்திகுளம் சோதனை சாவடியை கடக்க முயன்றனர். அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விக்டர் மற்றும் போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தங்களால் வாழ முடியாது அதனால் சொந்த ஊருக்கு செல்கிறோம் என தெரிவித்தனர். அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்க்குள்  நுழைய முடியாது என தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தார். தாசில்தார் பாஸ்கரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மாவட்ட எல்லைக்குள் நுழைய அனுமதியில்லை என எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.