குலசேகரபட்டணம் ராக்கெட் ஏவுதளம்: நில எடுப்பு பணிகள் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி,ஆய்வு

குலசேகரபட்டணம் பகுதியில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நில எடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணம் பகுதியில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நில எடுப்பு பணிகளையும், குலசேகரபட்டணம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், குடிநீர், இ டாய்லெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேற்று (16.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணம் பகுதியில் இஸ்ரோ மூலம் 2,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜனவரி மாதம் முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட்டாட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக 4 யுனிட்டுக்கு நில எடுப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. முடிவுற்ற உடன் நிலம் இஸ்ரோவிற்கு ஒப்படைகப்படவுள்ளது.

மேலும், குலசேகரபட்டணம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கருத்துரை அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மூலம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பகுதிகளில் பக்தர்கள் தங்களது வாகனத்தினை நிறுத்துவதற்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் இ டாய்லெட் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சூரிய மின்சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் இப்பணிகளை முடித்திடும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய தினம் (15.06.2020) வரை 426 நபர்கள் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநில 190 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் மற்றும் சென்னை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் நபர்களை சோதனைசாவடியில் கண்டறியப்பட்டு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த 85 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நபர்களுடன் தொடர்பில் உள்ள 50 நபர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் பயண விவரங்கள், அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பிற மாண்டலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்கள் முறையாக இ பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை கண்காணிக்க சோதனை சாவடிகள் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் சரியான முறையில் கையாள்வதால் நமது மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பரியா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பரத், இஸ்ரோ துணை ஆட்சியர் ஜெயா, இஸ்ரோ வட்டாட்சியர்கள் சிவகாமிசுந்தரி, கோபாலகிருஷ்ணன், நாகசுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் அருணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், ராணி, முக்கிய பிரமுகர்கள் சங்கரலிங்கம், துரை, சுடலை மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.