கோவில்பட்டி தபால் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று – துணை தபால் அலுவலகம் மூடப்பட்டது

சென்னைக்கு சென்று திரும்பிய கோவில்பட்டி தபால் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கிராமிய அஞ்சலக ஊழியரான 56 வயதுடைய ஆண் நபரும், அவரது மனைவியும் சென்னைக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்களாம்.

பின்னர் அவர் இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு திரும்பினாராம்.பின்னர் வழக்கம்போல் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இவர் சென்னைக்கு சென்று திரும்பிய 10 நாளுக்குப் பின் மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவத் துறையினர்

அறிவுறுத்தலையடுத்து இவர் இம்மாதம் 10ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தங்கினர்.அதையடுத்து அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் பணியாற்றி வந்த துணை அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டது.

மேலும், அவருடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் அஞ்சலக ஊழியர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.