கோவில்பட்டியில் புது மாப்பிள்ளை உள்பட 7 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் புதன்கிழமை (ஜூன் 10) திருமணம் நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் இருந்து உரிய அனுமதி சீட்டு இல்லாமல் வந்த புது மாப்பிள்ளை உள்பட 7 பேரை வருவாய்த் துறையினர் முகாமில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எல்கையான கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் இன்று
சென்னையில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சென்னை புழல் பகுதியில் இருந்து 7 பேர் கோவில்பட்டியில் உள்ள சுப்பிரமணியபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போது நடத்திய ஆய்வில் கார் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சென்னையில் இருந்து வந்தது தெரியவந்தது.மேலும் விசாரணையில் காரில் வந்த 32 வயதுடைய ஆண் நபருக்கும், கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் முன்பு திருமணம் நடைபெற இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து காரில் வந்த 7 பேரும் சோதனைச் சாவடியில் இருந்து திடீரென திரும்பிச் சென்றார்களாம்.இதையறிந்த சோதனைச் சாவடியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் செந்தில்வேல், வருவாய்த் துறை உதவியாளர் பொன்னம்மாள், வட்ட சார்பு ஆய்வாளர் பிரியதர்ஷினி, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த புது மாப்பிள்ளை உள்பட 7 பேரும் ஆவல்நத்தத்தில் உள்ள மணப்பெண் வீட்டிற்குச் சென்று திருமண ஏற்பாடு செய்தது தெரியவந்ததையடுத்து வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் புது மாப்பிள்ளை உள்பட 7 பேரையும் கோவில்பட்டியிலுள்ள முகாமிற்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் சுகாதாரத் துறைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் தகவல் தெரிவித்தனர். பின்னர், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மருத்துவப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே திருமணம் செய்ய அறிவுறுத்தினர்.