கல்குவாரியின் அனுமதியை ரத்து ரத்து செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளம் கிராம எல்லையில் உள்ள கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி வட்டம் ஜமீன்தேவர்குளம் கிராம எல்லையில் கல்குவாரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் கடந்த 6-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அனுமதிக்கப்படாத பைப் வெடிகுண்டுகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது சுற்றுவட்டார கிராமங்களில் அதிகமான நில அதிர்வு ஏற்பட்டு, பூகம்பம் என மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே வரும் நிலை உருவாகியது. வானத்திலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

மேலும் ஜமீன் தேவர்குளத்தில் உள்ள நீர்வரத்து கால்வாய் முற்றிலும் கல்குவாரியாக மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரி அருகேயே விவசாய நிலங்கள் உள்ளதால், நிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இதன் அருகே கோயில்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளன. ஊரடங்கு காலத்திலும் தங்குதடையின்றி வெடிவைத்து தகர்த்து கல்குவாரி பணி நடைபெற்று. எப்போதும் அனுமதிச் சீட்டு இன்றி ஜல்லிகள், எம் சாண்ட் மணல், சரள் மண் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.