தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொரானா காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொரானா காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் முதன்மை மாவட்ட நீதிபதி திரு என். லோகேஸ்வரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (18.03.20) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது: கொரானா வைரஸ் ஒரு நபரில் இருந்து மற்றொரு நபருக்கு எளிதாகப் பரவும் நோயாகும். மேலும் கொரானா வைரஸ் தொற்று ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டு தனிமை படுத்துவதன் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முடியும். கொரானா காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடி அதிக அளவு வருகை தர வாய்ப்பு உள்ளதால் நீதிமன்ற வளாக நுழைவு வாயிலில் பொதுமக்கள் கை கொள்வதற்கு ஏதுவாக தற்காலிக கைகழுவும் இடத்தினை அமைத்து சோப்புகள் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்துக்கு வருகைதரும் வழக்கறிஞர்களும் இந்த கைகழுவும் முறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்திற்கு தேவையில்லாமல் செல்வதை தடுக்க வேண்டும். வாரம் தோறும் நடைபெறும் கூட்டங்களை மார்ச் 31 வரை ஒத்தி வைக்க வேண்டும். கொரானா காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து தங்களுடன் பணியாற்றும் பணியாளர்களுக்கு எடுத்துக்கூறி தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நோய்த்தொற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வராமலிருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் மூலம் நீதிமன்ற வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப, மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலன் இ.ஆ.ப , முதன்மை குற்றவியல் நடுவர் திருமதி.ஹேமா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் திரு.சாமுவேல் பெஞ்சமீன், மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அருண்குமார் மற்றும் நீதியரசர்கள் வழக்கறிஞர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.