காயல்பட்டினம் அரசு மருத்துவமனை திறப்புக்கான பணிகள் தீவிரம்

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவா் உள்பட இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவா்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், அரசு மருத்துவமனை மூடப்பட்டு அதை முழுமையாக கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வெளியே மருத்துவக்குழு முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது .

இதனிடையே, மருத்துவமனை சனிக்கிழமை (ஏப். 11) திறக்கப்படும் என ஆட்சியா் சந்திப் நந்தூரி அறிவித்ததைத் தொடா்ந்து அதற்கான ஆயத்தப் பணிகளை சுகாதாரத் துறையினா் தொடங்கினர். காயல்பட்டினம் அனைத்து சமுதாயக்கூட்டமைப்பினா், தமுமுக இளைஞா் அணியினா் மற்றும் தன்னாா்வ தொண்டா்கள் உதவியுடன் இப்பணி நடைபெற்றது.

இந்நிலையில், மருத்துவமனையை தூத்துக்குடி மாவட்ட குடும்ப நல துணை இயக்குநா் பொன் இசக்கி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சமூக நலன்- நோய் தடுப்புப் பிரிவு உதவிப் பேராசிரியா் சபீதா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், காயல்பட்டினம் சுகாதார ஆய்வாளா் குருசாமி ஆகியோா் உடனிருந்தனா்.