காவலன் செயலி: சென்னை காவல்துறை ஆணையர்

பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து காப்பதற்காக தமிழக அரசு, காவலன் என்ற செயலியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் இடையே போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். காவலன் செயலியில் மொபைல் எண், பிறந்த தேதி, முகவரி மற்றும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும். அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், பதிவிறக்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.