அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.4 லட்சம் கோடி கடன் : கனிமொழி MP பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது தெரியாமல், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமல் பட்ஜேட் எப்படி போடுவது என்பது தெரியாமல் ஒரு அடிப்படை இல்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடனாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக, நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் நலனுக்காகக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க மாநிலங்களவையில் வாக்களித்திருந்தாலே போதும். அதைவிட்டுவிட்டு சில சரத்துகளை நீக்கக்கோரி பிரதமருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியது தேவையில்லாத ஒன்று என்றார். மேலும்  தமிழரின் நாகரிகத்தைப் பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள், கண்டெடுப்புகள் ஆதிச்சநல்லூரிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், இங்கு நடந்த அகழாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார்.