தூத்துக்குடி தொகுதி கனிமொழி எம்பி இன்று அரசு மருத்துவமனையில் ஆய்வு

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று தூத்துக்குடி தொகுதி எம்பி., கனிமொழி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு செய்யவும், அவர்கள் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வந்துள்ளேன். கொரோனா சிகிச்சைக்காக தனி கட்டடத்தையே ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதி தேவை என்று என்னிடம் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் தாெகுதி நிதியிலிருந்து அந்த தொகை இன்றே ஒதுக்கப்படும்.

காய்கறி கடைகளில் சமூக இடைவெளிக்காக தனித்தனியே அமைத்தது போல் மீன் கடைகளிலும் அது போல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், மற்றும் ரேசன் கடைகளில் அதிக கூட்டம் உள்ளது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு நிற்கும் சூழல் உள்ளது. எனவே சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்துவதாக தெரிவித்த அவர், பொதுமக்களும் அரசு 21 நாட்கள் வெளியே வர வேண்டாம் என்ற அறிவித்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ. 1000 நிவாரண உதவி தொகை கண்டிப்பாக போதாது. இந்த தொகையை ரூ. 5000 ஆக உயர்த்த வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் காேரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகம் ஆகும் என்றால் அதற்கும் அரசு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பில் அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார்.