ஒலிம்பிக்காக ஓட்டப்பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்த கம்பளா வீரர்!!!

சமீபத்தில் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற உசைன் போல்டினை விட அசுர வேகத்தில் 145மீ தூரம் கொண்ட இலக்கை 13 வினாடியில் கடந்து முதல் பரிசை வென்றது பரபரப்பாகப் பேசப்பட்டு இவர் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாகி விட்டார். இவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில், சீனிவாச கவுடாவிற்கு பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் விருந்தினர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எடியூரப்பா மைசூரு தலைப்பாகையை சீனிவாச கவுடாவிற்கு அணிவித்து, அரசு சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையைப் பரிசாக வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாச கவுடா, கம்பளாவும் ஓட்டப்பந்தயமும் ஒன்று இல்லை. எனவே ஓட்டப்பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், பாரம்பரிய விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.