காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பனைஓலையால் காமராஜர் உருவச்சிலைகள் செய்து அசத்திய தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பால் பாண்டி (65). இவர் பனை தொழிலாளி. பனைஓலை மூலமாக பல்வேறு உருவச்சிலையை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக இவர் காமராஜர் 7 அடி சிலை, அப்துல் காலம் சிலை, விவசாயி , பனை மரத் தொழிலாளி, தாஜ்மகால், கிறிஸ்தவ ஆலயம், கோபுரம் உள்பட பல்வேறு உருவங்களைப் பனை ஓலை மூலம் படைத்துள்ளார்.

இதை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாநாடுகளில் கண்காட்சியாகவும் நடத்தி வருகிறார். இந்த வருடம் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி தற்போது காமராஜர் உடன் இரண்டு பள்ளி குழந்தைகள் இருப்பது போல ஓலையால் செய்ய ஆரம்பித்தார். கடந்த 2 மாதம் முயற்சிக்குப் பின் அவர் சிறுமி,சிறுவர் ஆகிய இரண்டு பள்ளி குழந்தைகள் புத்தக கட்டை தூக்கிக் கொண்டு பள்ளி செல்லும் காட்சியை தத்ரூபமாக பனை ஓலையில் உருவாக்கினார். அதன் பின் அவர் ஏற்கனவே செய்து வைத்திருந்த காமராஜர் சிலைக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்களை வைத்து காட்சிக்கு வைத்துள்ளார். நாளை காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த உருவங்களைச் செய்துள்ளார்.