ஜப்பான் போர்க்கப்பல்

இந்திய கடற்படையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட ஜப்பான் போர்க்கப்பல் இன்று சென்னை வருகை

இந்திய கடற்படை வீரர்களுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் நமது நாட்டுக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் ஜப்பான் கடலோர காவல் படையினர் இந்தியா வந்து நமது கடற்படையினருடன் வங்கக்கடலில் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து ‘எச்சிகோ’ என்ற போர்க்கப்பலில் அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இன்று(திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் சென்னை துறைமுகத்துக்கு வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:-
ஜப்பான் கடற்படை ரோந்துக்கப்பலான ‘எச்சிகோ’ சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. நமது கடற்படையுடன் இணைந்து வங்கக்கடலில் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகிறது.

இருநாடுகளின் கடற்படை வீரர்களிடம் உள்ள பல்வேறு திறன்களை பரிமாறிக் கொள்ளவும், நல்லெண்ண பயணமாகவும் இந்த பயிற்சி அமையும். இந்த கூட்டுப்பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படையினர் பங்கேற்றனர்.
ஜப்பான் கடற்படையினர் இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் இந்திய கடற்படை வீரர்களுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியில் விளையாட்டு, தொழில்நுட்பம், சமுதாய வளர்ச்சிப்பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இருநாட்டுப் படையினரும் கூட்டாக பங்கேற்க உள்ளனர்.


இதன் முக்கிய நிகழ்ச்சியாக இருநாட்டு கப்பல்கள் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னைக்கு அருகே வங்கக்கடலில் நடக்கிறது. இதில் இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


ஜப்பான் போர்க்கப்பலை வரவேற்கும் வகையில் சென்னை துறைமுகத்தில் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கடலோர காவல் படை கிழக்குப்பிராந்திய தளபதி பரமேஷ் தலைமையில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

-dailythanthi